பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்! உயர் நீதிமன்றம் உத்தரவு…

Must read

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை  உயர்நீதிமன்றம் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு உள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில்,  வழக்கின் விசாரணையை தினசரி அடிப்படையில் விசாரித்து 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசியை நியமித்தும்  ஆணையிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள அதிமுக நகர மாணவரணி முன்னாள் செயலாளர் அருளானந்தம் என்பவரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு  நடைபெற்றது. இந்த சம்பவம் கடந்த அதிமுக அரசு மீதான கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைய  வைத்த இந்த பாலியல் வழக்கில், அதிமுகவினர் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சி.பி.ஐ ஏற்கனவே கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்  இந்த வழக்கு தொடர்பாக  கைது செய்யப்பட்ட  பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.  கடந்த விசாரணையின்போது,  சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”ஏற்கெனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால், சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருகிறது. சிபிஐ-யில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது’ என்று கூறினார்.

இதையடுத்து, சிபிஐக்கு உதவ தமிழகஅரசு தயாராக இருப்பதாகவும்,  இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தமிழ்நாடு காவல்துறை தயாராக இருக்கிறது, தேவைப்பட்டால்  எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை  நியமித்து உதவத் தயாராக இருக்கிறோம்’  என்று கூறப்பட்டது.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,அருளாணந்தம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி,  வழக்கின் விசாரணையை வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 6 மாதத்தில்  முடிக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும், சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசியை நியமித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அமைச்சர் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமனுடன் நெருக்கம் கொண்டவர் அருளானந்தம்….

 

More articles

Latest article