டெல்லி: குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து 2 வாரத்தில் மத்தியஅரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என  இந்தியாவின் கோவிட்-19 பணிக்குழு தலைவர் டாக்டர் என் கே அரோரா தெரிவித்து உள்ளார்.

உலக நாடுகளை 2 ஆண்டுகளாக அச்சுறுத்திவரும் கொரோனா பெருந்தொற்று அவ்வப்போது உறுமாறிய நிலையில் பிறழ்வு வைரசாக மாறி பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த,  இந்தியாவில்  கடந்த ஆண்டு இறுதியில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள்  மக்களுக்கு செலுத் தப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில்  தடுப்பூசி ஒன்றே நமக்கு பாதுகாப்பு கவசமாக, நமக்கு கிடைத்த ஆயுதமாக மாறி யிருக்கிறது. தற்போது வரை சுமார் 122 கோடிக்கும் அதிகமான 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 18வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படாமல் உள்ளது.

ஆனால், தற்போது பரவி வரும் வீரியம் மிக்க ஒமிக்ரான் வைரஸ் குழந்தைகளை தாக்கும் அபாயம் உள்ளதால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து இந்திய அரசு ஆலோசித்து வருகிறது.  தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.  இதன் வேகமும் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கூட புதிய வேரியண்ட் ஆபத்தை ஏற்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்ததாத குழந்தைகளை எந்த அளவுக்கு ஓமிக்ரான் வேரியண்ட் பாதிக்கும் என்பது மேலும் அச்சத்தை தருவதாக உள்ளது.

ஒமைக்ரான் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 2 டோஸ்  தடுப்பூசி அவசியம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசும் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டுவதுடன்,  ஓமிக்ரான் வகை கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும், நாடு முழுவதும் உள்ள  44 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவர்  டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்து உள்ளார்.

மேலும், “குழந்தைகளே நமது முக்கியமான சொத்து என நான் அடிக்கடி கூறிவருகிறேன். அதன்படி இந்தியாவில் 18 வயதிற்கு கீழ் உள்ள 44 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விரிவான திட்டத்தை தயாரித்திருக்கிறோம். ZyCoV-D , Covaxin, Corbevax மற்றும் mRNA வேக்சின்கள் தற்போது குழந்தைகளுக்கு செலுத்த போதிய அளவில் நம்மிடம் உள்ளது.

ஆரோக்கியமற்ற மற்றும் இணை நோய்கள் கொண்ட குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் விரிவான திட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்.

பூஸ்டர் மற்றும் கூடுதல் தடுப்பூசி செலுத்துவது குறித்து நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. இதுவும் விரைவில் அறிவிக்கப்படும்.

இதில் யாருக்கு தடுப்பூசி தேவை, யாருக்கு தேவைப்படாது என வரையறுக்கப்படும். பூஸ்டர் மற்றும் கூடுதல் தடுப்பூசிகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி போதிய அளவில் உருவாகதவர்களுக்கு தான் கூடுதல் தடுப்பூசி தேவைப்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.