சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி அடையாளம் காணப்பட்டுள்ள  பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  சென்னையில் மட்டும், கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகர போலீசார், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல்படையினர் என மாநகரம் முழுவதும் கூடுதலாக மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்களுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22ந்தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவையொட்டி நேற்று மாலை 6மணியுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில், தேர்தல் முறைகேடுகளை தடுக்க சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை ஒரேகட்டமாக 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது. இந்த தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப் பட்டு, தகுந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே வாக்குப்பதிவு தொடர்பான நம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடி அணிவகுப்புகள் நடத்தப்பட்டது. தேர்தல் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த தேர்தலில் நடந்த குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மேல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட 1,343 நிலைக்குழுக்கள் நிறுவப் பட்டுள்ளன.

தேர்தல் தொடர்பான பிரச்னைகள் நிலவும் பகுதிகளுக்கு விரைந்து சென்று தீர்வு காணும் வகையில் 846 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சட்ட விரோத மதுபான விற்பனை, ஆயுதங்கள் கடத்துவது மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் வருவதை தடுக்கும் பொருட்டு 455 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை நடந்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் வகையில், தாலுகா மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த 17 ஆயிரத்து 788 காவலர்கள், 71 ஆயிரத்து 74 ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர தமிழ்நாடு சிறப்பு படையினை சேர்ந்த 9 ஆயிரத்து 20 காவலர்கள் உட்பட மொத்தம் 97 ஆயிரத்து 882 காவல் அதிகாரிகள் உட்பட காவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12 ஆயிரத்து 321 ஊர்க்காவல் படையினர், 2 ஆயிரத்து 870 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் என மொத்தம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 73 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள. இத் தேர்தல் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்டம் மற்றும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் டிஜிபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொருத்தவரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகர போலீசார், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல்படையினர் என மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி தேர்தல் பத்தற்றமான வாக்குசாவடிகள் என கணக்கெடுக்கப்பட்ட 1,198 வாக்கு சாவடி மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி முதல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், லாட்ஜ்கள், ரிசாட்டுகளில் அதிரடி சோதனை நடத்தி வெளியாட்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதேபோல் சென்னை மாநகர காவல் எல்லை மற்றும் தாம்பரம், ஆவடி மாநகர காவல் எல்லைக்குப்பட்ட பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் தேர்தல் பறக்கும் படையிரும் பணம் பட்டுவாடாவை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.