திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாரின் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையம் உள்பட பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை தொடங்கு வைக்க விமானம் மூலம் திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதோடு பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி தனி விமானத்தில் இன்று காலை 10 மணி அளவில் திருச்சி வந்தடைந்தார். அவரை  விமான நிலையத்தில், ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து காலை 10.20 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்த காரில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டார். கார் மூலம் சுமார் 11 கிலோ மீட்டர் பயணம் செய்து அவர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு கார் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், பிரதமர் மோடியை வரவேற்க சத்ரபதி சிவாஜி, மோடி, சர்தார் படேல் ஆகியோரைப் போல வேடமணிந்து பா.ஜ.க.வினர் வந்தனர்.   விமான நிலையத்திற்கு வெளியே சாலையின் இருபுறமும் ஏராளமான பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் கைகளில் பாஜகவின் கொடியை ஏந்தியவாறு மோடியை அசைத்து வரவேற்றனர். மேலும், சாலையோரங்களில் மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை கண்டுகளித்தவாறு பிரதமர் மோடி, பாரதி தாசன் பல்கலைக்கழகம் வந்தடைந்தார்.  அவருக்கு பல்கலைக்கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து. பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் சிலைக்கு மலர்ததூவி மரியாதை செலுத்தினார். அதையடுத்து, பாரதி தாசன் பல்கலைக்கழக  38வது பட்டமளிப்பு விழா  தேசியகீதத்துடன் தொடங்கி நடைபெற்றது.  இந்த  விழாவில், டிப்பில் தங்கம் பதக்கம் பெற்ற 33 நபர்களுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார். 33 பேருக்கு பட்டங்களை  வழங்கிய பிரதமர் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின் மேடையில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் அமர்ந்து விழாவினை சிறப்பித்தனர்.

இந்த ஆண்டின் முதல் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.