தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விருதுநகர், கரூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள அவர் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

பிரதமரைத் தொடர்ந்து அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 18 மத்திய அமைச்சர்கள் வரிசையாக தமிழகம் நோக்கி படையெடுக்க உள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன் என பாஜக தலைவர்கள் பலரும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்காக ஆதரவு திரட்டும் வகையில் இவர்கள் அனைவரும் தமிழகம் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஒரு தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் இன்னும் இழுபறி நிலைமையை சந்தித்து வருகிறது.

இந்த வேட்பாளர் அறிவிப்பு வெளியான பின்பே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களின் தமிழக வருகை குறித்து இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.