டெல்லி: நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க நாடு, 551ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் புதியதாக அமைக்க,  பிஎம் கேர்ஸ் நிதியிலிந்து நிதி ஒதுக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சமடைந்து உள்ளதால், தினசரி பாதிப்பு 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காததுடன், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய , மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் அலுவலகம் (PMO) நாடு முழுவதும  551 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ, பிஎம் கேர்ஸ் (PM Cares) நிதியிலிருந்து, நிதி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க, மிக விரவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில், அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார மையங்களில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும். இந்த ஆலைகள் மாவட்ட அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில் செயல்படும். இந்த ஆலைகள், மிக குறுகிய காலத்தில், மிக விரைவில் நிறுவப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.