டில்லி

ந்திய பிரதமராக இருக்க மோடி தகுதி இல்லாதவர் என தற்போதைய கொரோனா நிலை நிரூபித்துள்ளதாக இந்திய மருத்துவ சங்க துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  உலக அளவில் தினசரி பாதிப்பில் சில நாட்களாக இந்தியா முதல் இடத்தில் உள்ளது.  தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியும் நேற்றைய மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,808 ஆகவும் உள்ளது.

நேற்று முன் தினம் இது குறித்து இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத் தலைவர் நவ்ஜோத் சிங் தாகியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்  அந்த அறிக்கையில், “மருத்துவ நிபுணர்கள் கொரோனா பரவலைத் தடுக்க மக்களிடம் சமூக இடைவெளி குறித்த புரிதலை உண்டாக்கப் பெரிதும் முயற்சி செய்கின்றனர்.  ஆனால் பிரதமர் மோடி அதை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டுத் தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

இந்தியாவில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட போது அதை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு அதிகமானோருடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு வரவேற்புக் கூட்டம் நடத்தினார்.  தற்போது இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க கடந்த ஓராண்டாக மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் மரணம் அடைந்து வருகின்றனர்.   ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் பல மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.  ஆனால் இந்த முக்கியமான நிலை குறித்து மோடி அரசு எந்த ஒரு கவலையும் படாமல் இருக்கிறது.  மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலாகும் போது பாஜக தொடர்ந்து தேர்தல் பேரணிகளையும் ஹரித்வார் கும்பமேளாவையும் நடத்தி வருகிறது.

நாட்டில் பிணங்களை அடக்கம் செய்ய வரிசையில் நிற்கும் அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.  அத்துடன் மருத்துவமனை வாசலில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் வரிசை கட்டி நிற்கும் சூழல் உள்ளது.   ஆனால் அதையும் பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை.  எனவே இவற்றின் மூலம் இந்திய பிரதமராக இருக்க மோடி தகுதி அற்றவர் என்பது நிரூபணம் ஆகி உள்ளது” என தெரிவித்துள்ளார்.