முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு, தமிழக அரசு பெரியார் விருது அளித்துள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், “வளர்மதிக்கு பெரியார் விருது அளித்தது அத்தனை பெரிய தவறல்ல” என்ற கோணத்தில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின்.

“வளர்மதி என்ன தக்காளி தொக்கா?” என்ற தலைப்பில் முகநூலில் அவரது பதிவு இதோ..

“பெரியார் வழி நடப்பவர்களுக்குத்தான் தமிழக அரசின் பெரியார் விருது கொடுக்கப்பட வேண்டும் என்றால் கறுப்புச் சட்டைக்காரர்களுக்கு மட்டும்தான் தரவேண்டும். (அதிலும்கூட சர்ச்சைகள் கிளம்பும்). கலைஞர் ஆட்சியின்போது நக்கீரன் ஆசிரியர் கோபாலண்ணனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.

நெற்றியில் குங்குமமும், கைகளில் பல வண்ணக் கயிறுகளும் கட்டும் வழக்கம் உடையவர் அவர். அதுவே அவரது ஆத்திக ஈடுபாட்டை மறைக்காமல் காட்டும். ஆனால், பெரியார் விருது அவருக்கு வழங்கப்பட்டதற்குக் காரணம், சமூக நீதிப் பார்வையில் பத்திரிகை நடத்துவதற்காகவும், காஞ்சி மடாதிபதி உள்ளிட்ட காவி வேடதாரிகளை தோலுரித்துக் காட்டிய துணிச்சலுக்காகவும்தான்.

இந்த ஆண்டு, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருது என்ற அறிவிப்பு வெளியானதுமே தாறுமாறாக மீம்ஸ்கள் வெளிப்பட ஆரம்பித்துவிட்டன. சென்னை செந்தமிழில் அவர் பேசியபோது எடுத்த புகைப்படமும், தீச்சட்டி ஏந்திய-மண்சோறு சாப்பிடுகிற படங்களும் வெளியிடப்பட்டு விமர்சனத் தோரணங்கள் கிழித்து தொங்கவிடப்படுகின்றன.

இந்த விமர்சனங்களின் நியாயத்தை உணர முடிகிறது.

அதே நேரத்தில், அரசு விருது என்பது ஆட்சியாளர்களின் மனதுக்கு உகந்தவர்களுக்கு வழங்கப்படும் நிலையில், இன்றைய அ.தி.மு.க. பிரபலங்கள் பெரும்பாலானவர்களில் யாருக்கு பெரியார் விருது தந்தாலும் இதே நிலைமைதான்.

முன்பு, பண்ருட்டி ராமச்சந்திரனுக்குப் பெரியார் விருது வழங்கப்பட்டது. பெரியார் வலியுறுத்தியவற்றில் முக்கியமானது, இயக்கக் கட்டுப்பாடு. பண்ருட்டி ராமச்சந்திரனோ, தான் பங்கேற்ற இந்த இயக்கத்திற்கும் விசுவாசமாகவோ கட்டுப்பாடாகவோ இருந்தவரல்லர். தலைமைக்கு வஞ்சகம் செய்வதில் தமிழகத்து ‘பாஸ்கரராவ்’ எனப் பெயர் பெற்றவர். அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டபோது, நீண்ட கால திராவிட இயக்கத்துக்காரர் என்ற வகையில் தமக்குத் தாமே சமாதானம் செய்து கொண்ட மனதுகளெல்லாம், வளர்மதிக்கு விருது என்றதும் பொங்குகின்றன.

அரசியல் அசிங்கமாக விளங்கும் ஆணுக்கு பெரியார் விருது தரப்படலாம் என்றால், அதே அளவுகோலைக் கொண்ட பெண்ணுக்கு தருவதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

திராவிட இயக்க அரசியலுக்கேயுரிய மேடைப் பேச்சும், அதற்கு கிடைத்த பொதுமக்களின் வரவேற்பும்தான் வளர்மதியின் ஆரம்பகால அரசியல் அடையாளம். கைதட்டல் போதை ஏறும்போது வார்த்தைகள் கட்டுப்பாட்டை இழக்கும். வளர்மதிக்கும் அதுதான் நேர்ந்தது. அதுவே அவருக்கான சிறப்புத் தகுதியாகி, அரசியலில் அவருக்கான இடத்தை உருவாக்கியது.

எம்.ஜி.ஆர். காலம் கடந்து, ஜெயலலிதா காலம் வந்தபோது, நிலைமைகள் இன்னும் மாறின. சக பெண் நிர்வாகிகளுடன் போட்டியிட்டு அரசியலில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், இயக்கத்தின் தலைமை விரும்புகிறபடி நடந்தால்தான் காலம் தள்ள முடியும். அதன் விளைவுதான் வேப்பிலை ஆடை, மண்சோறு, தீச்சட்டி எல்லாமும்.

தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசுவது ஆண் நிர்வாகிகளுக்கான அசைன்மெண்ட் என்றால், நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியசாமிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்பு ‘காட்டுவது’ வளர்மதி போன்றவர்களுக்கான அசைன்மெண்ட்டாக தலைமையினால் தரப்பட்டது.

அரசியலின் அத்தனை ஒழுக்கங்களையும் தன்னுடைய தான்தோன்றித்தனத்திற்காக மொத்தமாக அழித்த ஜெயலலிதாவை, ‘ஆளுமை’ என்று போற்றிக்கொண்டு வளர்மதிகளுக்கு மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறோம். வார்த்தை அளவில் ரஜினி சொன்ன ஆன்மிக அரசியலை செயல் அளவில் முழுமையாக நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா. கரசேவைக்கு ஆதரவு காட்டி, ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைகயை, தானே முன்னின்று செயல்படுத்தியவரும் ஜெயலலிதாதான்.

அவரைத்தான், ‘மோடியா லேடியா’ எனக் கேட்டு பா.ஜ.க.வை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுத்தவர் என்று ‘வரலாறு’ பேசுகிறோம். தான் புதைவதற்கு முன்பே பெரியாரின் கொள்கைகளைப் புதைக்க நினைத்து, புதைந்து போனவர் ஜெயலலிதா.
மரணத்திலும் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் அயோக்கியத்தனத்தைவிட, வளர்மதிக்கு அரசாங்கம் கொடுக்கும் பெரியார் விருது பெரிய அசிங்கமல்ல.

அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் காலம் வரை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பெயரில் கொடுக்கப்படும் விருதுகள் அனைத்தும் ‘அம்மா’ விருதுகள்தான். அதனைப் பெறுகிற ‘தகுதி’யில், வளர்மதி அந்த அம்மாவுக்கு சற்றும் குறைந்தவரல்லர்.”