விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன், அவ்வப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகி, உடல்நிலையை காரணம் காட்டி, பரோலை நீட்டித்து வருகிறார். ஏற்கனவே 4முறை அவரது பரோல் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசால் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் அவருக்கு பரோல் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது, ராஜீவ்காந்தி கொலை வழக்கின் மற்ற கைதிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் வந்த பேரறிவாளனுக்கு, சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர், கொரோனா பரவல் என கூறி,  மருத்துவ சிகிச்சை அளிக்க பரோல் வழங்க வேண்டும் என சிறைத்துறைக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து, அவருக்கு  கடந்த மே மாதம் 28-ம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர்  ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று ஓய்வுஎடுத்து வருகிறார்.

பின்னர் அவரது பரோல் காலம், அவரது தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று,   ஜூன் மாதம் 28-ம் தேதி மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழகஅரசு அனுமதி வழங்கியது.  வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இடையிடையே சிறுநீரக தொற்று காரணமாக, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றும் பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக, அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவரது பரோலும், ஜூலை, ஆகஸ்டு என 4 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

இதுவரை தமிழக சிறைத்துறை சார்பில், வேறு எந்தவொரு குற்றவாளிகளுக்கும் இவ்வாறு நீண்ட கால பரோல் கொடுக்கப்படாத நிலையில், பேரறிவாளனுக்கு அடுத்தடுத்து 4 மாதங்கள் தொடர்ந்து , தமிழகஅரசு பரோல் வழங்கப்பட்டு வருவது, கைதிகளில் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மற்றும், ராஜீவ்கொலை வழக்கில் தங்களது உறவினர்களை பறிகொடுத்த காவல்துறையினர் மற்றும் காங்கிரஸ்  கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தற்போது பேரறிவாளன் மீண்டும் சிறுநீரக தொற்று என்ற கூறி விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல்நிலையை காரணம் காட்டி,  தனது பரோலை மேலும் நீட்டிக்கும் நாடகமாகவே, மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்து கருத்து சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், பரோல் கேட்டு ஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கு கைதிகளான முருகன், நளினி, ரவிச்சந்திரன் உள்பட பலர் விண்ணப்பித்தும், அவர்களுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. கைதி ரவிச்சந்திரன், பேரறிவாளன் பரோலை சுட்டிக்காட்டி,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ரவிச்சந்திரன்  பரோல்மீது தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் மாநில அரசை அறிவுறுத்தி உள்ளது. ஆனால், தமிழகஅரசு இதுவரை எந்தவொரு முடிவும் அறிவிக்கவில்லை.

மற்ற கைதிகளுக்கு  பரோல் வழங்க அனுமதி அளிக்காத மாநில அரசு, பேரறிவாளனுக்கு மட்டும் தொடர்ந்து பரோல் வழங்குவது ஏன்?

30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வரும் ராஜீவ்கொலை வழக்கு கைதிகள்  7 பேரையும் மொத்தமாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கலாமே?

பேரறிவாளனுக்கு 4வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு! தமிழகஅரசு தாராளம்…