சென்னை

னவரி முதல் தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற நிகழ்வுகள் மற்றும் பல மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.  ஆனால் இதுவரை தமிழகத்தில் இவ்வாறு ஒளிபரப்பு நடக்கவில்லை.  இது குறித்து பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.  தற்போது அந்த வேண்டுகோளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே இது குறித்து திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது.   தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 5 முதல் தொடங்க உள்ளது. கொரோனாவுக்கு பிறகு கலைவாணர் அரங்குக்குப் பதிலாக கூட்டத்தொடர் ஜார்ஜ் கோட்டையில்  நடைபெற உள்ளது. அப்போது சட்டப்பேரவை கேள்வி நேரம் நேரடியாக ஒளிபர்ப்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  அதிகாரிகள் ஏற்கனவே நாடாளுமன்ற இரு அவைகள் மற்றும் கேரளா,  டில்லி, கோவா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று இது குறித்து கற்று வந்துள்ளனர்.   இதன் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தங்களை மக்கள் கவனிப்பதை உணர்ந்து பொறுப்பு அதிகரிக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த நேரடி ஒளிபரப்புக்குப் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.  அதே வேளையில் இந்த  ஒளிபரப்பு கேள்வி நேரத்துக்கு மட்டும் அல்லாமல் சட்டப்பேரவையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக் கூறி உள்ளனர்.