சென்னை: அரசியலைவிட்டு சசிகலா விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகை.காம் இணையதளம் ஒருவாரத்திற்கு முன்னதாகவே செய்தி வெளியிட்டது. திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம் ஆண்டைப்போல 4 அணிகள் உருவாகுமா? என்ற தலைப்பில் பத்திரிகை.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி  இன்று உண்மையாகி உள்ளது.

டிடிவி தினகரனின் அதிகார போதை காரணமாகவே, சசிகலாவை அரசியலுக்குள் இழுக்க முயற்சி நடைபெற்று வந்த நிலையில், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த பலரும்,  அவர் அரசியலுக்கு வருவதை விரும்ப வில்லை என்று தெரிவித்திருந்தோம். தற்போது அதை உறுதி செய்யும் வகையிலேயே சசிகலாவின் அரசியல் துறவறம் நிகழ்ந்துள்ளது.

சசிகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் நான் என்றும் வணங்கும் என் அக்கா, புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சித் தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

 நம்முடைய பொது எதிரி, தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

 என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

 நான் என்றும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்எனக் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா இந்த முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் பலரை சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன், முன்பின் விளைவுகளையும் சிந்தித்தும், இருக்கும் காலம் அமைதியாகவும்,  இருக்கிற சொத்தை காப்பாற்றியும் காலத்தை நகர்த்தலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

சசிகலாவின் அரசியல் துறவரம் குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், தமிழக அரசியலில் சசிகலாவின் அரசியல் மையம் கனவாக கலைந்து விட்டது, அரசியல் கட்சியினர் இடையே சந்தோஷத்தை  ஏற்படுத்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது.

திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம் ஆண்டைப்போல 4 அணிகள் உருவாகுமா?