திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம் ஆண்டைப்போல 4 அணிகள் உருவாகுமா?

Must read

‘தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்பிறகே தேர்தலில் வெற்றிபெற்றவர் யார், ஆட்சியை அமைக்கப்போவது எந்த கட்சி என்பது தெரிய வரும்.

தேர்தலுக்கான நாட்கள்  மிக்குறைவாக இருப்பது  தமிழக  அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இருந்தாலும், தேர்தலை சந்தித்தே ஆக வேண்டும் என்பதால், அடுத்தடுத்து, கூட்டணி களேபரங்கள், தொகுதிபேரங்கள் சுறுசுறுப்பாக நடைபெறத்தொடங்கிவிட்டது.

தற்போதைய சூழலில், அதிமுக கூட்டணியில் இருந்து, சமத்துவ மக்கள் கட்சி மட்டும் விலகி உள்ள நிலையில், தமீம்அன்சாரி கட்சியும் விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக எதிலும் பிடிகொடுக்காமல், பணபேரத்தையே முன்னிறுத்துவதால், சித்தன்போக்கு சிவன்போக்கு என்பதுபோல, அதன் போக்கை கணிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. ஏனென்றால், 3வது அணி அமைப்போம் என்று அதிமுக ஒருபுறம் மிரட்டி, அதிக இடங்களை கேட்டு வருகிறது.  மற்றொருபுறம் சசிகலா, இன்னொரு புறம் திமுக என பல கட்சி கதவுகளையும், எங்களுக்கு என தனியாக வாக்கு வங்கி உள்ளது, நாங்கள் தான் முதல்வரை முடிவு செய்வோம் என்று மார்தட்டி வருகிறது. ஆனால், தேமுதிகவின் அரசியல் விளையாட்டுக்கு திமுக இடமளிக்கவில்லை என்றே நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில், திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே எனப்படும் பாரிவேந்தரின் கட்சி விலகி உள்ளது. எற்கனவே பெருந்தலைவர் மக்கள் கட்சி வெளியேற்றப்பட்ட நிலையில், மேலும் சில சிறிய கட்சிகளை திமுக சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் சில கட்சிகள் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மிருக பலத்துடன் போட்டியிட்டு, தனித்து ஆட்சியை அமைக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக உள்ள திமுக தலைமை, கூட்டணி கட்சிகளை  மதிக்க தவறி வருவது, கட்சித்தலைவர்களிடையே  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதன்முறையாக திமுகவுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச, டெல்லியில் இருந்து மூத்த தலைவர் சுரிஜிவாலா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி  போன்றோர் அண்ணா அறிவாலயம் வருகை தந்தும், அவர்களை மரியாதை நிமித்தமாகக்கூட திமுக தலைவர் ஸ்டாலின் சந்திக்காமல் புறக்கணித்தது, காங்கிரஸ் தலைமைக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கொடுக்கும் அசட்டுத் தைரியத்தில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் ஸ்டாலின் கூட்டணி கட்சியினரை மதிக்க தவறி வருவதாக, கூட்டணிக்கட்சித்  தலைவர்களே பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், சசிகலா தலைமையில் சில கட்சிகள் இணைந்து, தனி அணியாக  தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெ.பிறந்தநாள் அன்று, சசிகலாவை சீமான், சரத்குமார், எஸ் டி பி ஐ கட்சி , பாரதிராஜா உள்பட பல முன்னாள், இந்நாள் அரசியல் பிரமுகர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியதும், திரையுலகச் சேர்ந்த  பாரதிராஜா உள்பட பலர் சசிகலாவை சந்தித்ததும் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல, ஜெ.பிறந்தநாளன்று,  ஒன்றிணைந்து  தேர்தலை சந்திப்போம் என அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளதும் அரசியல் நோக்கர்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

அதிமுகவின் கணிசமான வாக்குகளை பிரித்து,  அமமுக தலைமையில் 3வது அணியை ஏற்படுத்தும் சசிகலாவிடம் திட்டத்தின் தொடக்கம்தான் இந்த அறிவிப்பு என்று அமமுகவினர் கூறி வருகினற்னர். இந்த கூட்டணிய்ல், சரத்குமாரின் கட்சி, ஐஜேகே உள்பட  சில கட்சிகளை இணைத்து களமிறங்க திட்டம் தீட்டப்படுகிறதோ என்ற சந்தேகங்கள்  உருவாக்கி உள்ளன.

அதை உறுதிப்படுத்தும் வகையில்தான், சரத்குமார் அதிமுகவில் இருந்து விலகல், ஐஜேகே திமுகவில் இருந்து விலகல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் சசிகலாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், டிடிவி தினகரனின் பேட்டியும் அமைந்திருந்தது.  “நாங்கள் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம் முடிவுக்கு வந்த பிறகு அறிவிக்கப்படும்” என்று கூறினார். இதனால், சசிகலா தலைமையில் 3து அணி அமைய வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது.

யூகங்களும், தகவல்களும் இப்படி இருக்கையில்,  சசிகலா நேரடியாக அரசியல் களத்தில் இறங்குவாரா என்பதும் சந்தேகத்திற்கிடமாக இருந்து வருகிறது. அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில்,  சசிகலா நேரடியாக களத்தில் இறங்கினால் மக்களிடம்  ஆதரவு கிடைக்குமா என்பது ஒருபுறம் உள்ள நிலையில், மற்றொருபுறம், அவருடன் அதிமுகவினரை  கைகோர்க்க விடாமல் தடுக்கும் முயற்சியிலும் அதிமுக தலைமை, பாஜக துணைகொண்டு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால், அதிமுகவில் உள்ள சசிகலா ஆதரவு அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ, முக்கிய நிர்வாகிகளோ நேரடியாக சசிகலாவிடம் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. மீறி சென்றால், அவர்கள் பாஜகவின் அடியாட்கள் துறையான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளின் தொல்லைக்கு ஆளாக நேரிடும் என்று மறைமுகமாக மிரட்டப்பட்டு உள்ளதாகவும் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியஅரசின் துணையுடன் எடப்பாடி அரங்கேற்றும்  இதுபோன்ற அதிரடி நடவடிக்கையால், சசிகலா எதிர்பார்த்த அளவுக்கு, அவருக்கு  ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், அதிமுகவை  கைப்பற்றும் முயற்சியும் தோல்வியடைந்ததாகவே கூறப்படுகிறது. மேலும், சசிகலா குடும்பத்தினரும், கொஞ்சகாலம் பொறுமையாக இருக்கும்படி வலியுறுத்தி வருவதாகவும் , சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து, பார்த்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை கூறி வருகிறார்கள். தேர்தல் சமையத்தில், மத்தியஅரசு, சசிகலா குடும்ப நிறுவனங்களின் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அது மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதால்,  தேவையற்ற பிரச்சினைகளில் சிக்க வேண்டாம் என்று தடை போடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தினரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக, என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல், சசிகலா தவித்துக்கொண்டு இருப்பதாக தி.நகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், டிடிவி தினகரனோ, அதிகாரபோதை காரணமாக, அரசியல் சசிகலாவை களத்திற்குள் கொண்டுவர பெரும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  இருந்தாலும், அதிமுக கூட்டணியின் இறுதி அறிவிப்பு மற்றும், அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியல்  அறிவிக்கப்பட்ட பிறகு,  தமிழக அரசியல் களம் மாறவும் வாய்ப்பு உண்டு.  அதிமுகவில் சீட் கிடைக்காதவர்கள், சசிகலாவை தேடிச்செல்லவும் வாய்ப்பு இருப்பதால், அப்போது தேர்தல் களம் மாறும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது அதுபோல, அதிமுக கூட்டணியில் உள்ள மேலும்  சில கட்சிகளும், அங்கிருந்து  விரைவில் வெளியில் வரும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேறும் கட்சிகளை சேர்த்துக்கொண்டு  தனி அணியை உருவாக்கி, அதிமுகவுக்கு டஃப் கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில், , கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையில் சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கவும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில்,  மக்கள் நீதி மய்யத்தை திமுக கூட்டணியில் சேர்க்க, ஸ்டாலின் மருமகன் சபரீசன் காய்நகர்த்தி வருகிறார் (குடும்ப அரசியல்). கூட்டணி தொடர்பான சபரீசன் அழைப்பை நிராகரித்த கமல், திமுக தலைமை கூப்பிட்டால், கூட்டணி குறித்துபேச தயார் என்று கூறினார். ஆனால், திமுக தலைமையிடம் இருந்து இதுவரை கமலுக்கு கூட்டணி தொடர்பாக அழைப்பு வரவில்லை.

ஆனால், தமிழக அரசியல் களத்தை உற்றுநோக்கினால், கடந்த 2016ம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4முனை போட்டி  நிலவியது போல ஒரு சூழல் தற்போது (2021)  சட்டமன்ற தேர்தலிலும் அமையும்  நிலை உருவாகி வருகிறது. 

தற்போதைய நிலையில், திமுக கூட்டணியில், திமுக உடன் காங்கிரஸ், மதிமுக, விசிக , இரு கம்யூனிஸ்டு கட்சிகள், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்டிபிஐ,  இந்திய யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சிகள் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. மேலும்,  தமிமும்அன்சாரியின் மனிதநேய மக்கள் கட்சி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல, அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தமாகா இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. அதுபோல, கருணாசின் முக்குலத்தூர் புலிப்படை  அதிமுக கூட்டணியில் தொடர்பாக தெரிவித்துள்ளார். சமீபத்தில், சரத்குமார் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் வெளியேறிய நிலையில், தேமுதிக இடம் பெறுமா என்பது சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. மேலும்,  தமிழ்மாநில முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய குடியரசு கட்சி, கொங்குபேரவை கட்சி (தனியரசு), சமத்துவ மக்கள் கழகம் (எர்ணாவூர் நாராயணன்) போன்ற கட்சிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் சசிகலா அமைக்கும் அமமுக தலைமையிலான 3வது அணியில் சிறு கட்சிகளை வளைத்துபோடும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. அதன்படி, சரத்குமார் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சிகள், விவசாயிகள் தொழிலாளர் கட்சி, சமூக சமத்துவப்படை, மக்கள் தேமுதிக, பாரிவேந்தரின் ஐகேகே, , இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் (யாதவர் கட்சி)  (இந்த கட்சிகள் அனைத்தும் ஜாதியை மதங்களை அடிப்படையாக கொண்டவை) போன்ற கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களையும் களமிறக்கி உள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் சீமான் சசிகலா அணியுடன் இணையும் வாய்ப்பு உள்ளது.

இதையெல்லாம் பார்க்கும்போது, தற்போதைய தமிழக அரசியல் சூழலில் 3அணிகள் உருவாவது உறுதியாகி உள்ளது.  4வது அணி உருவாவது, கூட்டணி, தொகுதி உடன்பாடு போன்றவை இறுதி செய்யப்பட்ட பிறகே தெரியவரும். இதற்கு முக்கிய காரணமாக இருக்கப்போவது திமுகதான் என அரசியல் நோக்கர்கள் கணித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில், திமுக தலைமை,  கூட்டணி கட்சிகளிடம் நடந்துகொள்ளும் முறை, தொகுதிகள் ஒதுக்கீடு போன்றவையே, தேர்தலில்  4வது அணி அமையுமா அல்லது, அது காணல் நீராக மாறுமா என்பதை தீர்மானிக்கப்போகிறது.

கடந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்  4 முனை போட்டி ஏற்பட்டதால், வாக்கு வங்கிகள் சிதறின. இதனால், பெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் மட்டுமே தங்களது வாக்கு வங்கியை நம்பி களமிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  அதில், அதிமுக வெற்றிவாகை சூடி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. ஆனால், இந்த முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்றிய ஆக வேண்டும் என களமிறங்கியுள்ள திமுக தலைமை, தனது அதிகாரத்தோரணையை கைவிட்டு,  கூட்டணி கட்சியினரை மதித்து தேர்தல் சந்தித்தால், தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற முடியும்.

இதை கவனத்தில்கொண்டு திமுக தலைமை தேர்தல் கூட்டணியை அமைத்து, தேர்தல் களத்தை சந்தித்தால், எளிதாக வெற்றிக்கனியை பறிக்கலாம்…

 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article