ஊரடங்கு நேரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அதிகாரபூர்வ இல்லத்தில் மது விருந்து நடைபெற்றதாகவும் அதில் அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

சரக்கு உன்னது… சைட்-டிஷ் என்னது என்ற ரீதியில் இந்த மது விருந்தில் கலந்து கொண்டவர்கள் அவரவருக்கு தேவையான மது வகையை கையோடு கொண்டுவர வேண்டும் என்ற ஒற்றை கண்டிஷன் மட்டும் விதிக்கப்பட்டிருந்தது.

 

மது விருந்தில் போரிஸ் ஜான்சனும் கலந்து கொண்டதாக வெளியான தகவலை அடுத்து, அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

நாடாளுமன்ற விசாரணை குழு முன்பு ஆஜரான பிரதமர் போரிஸ் ஜான்சன் அலுவல் நிமித்தமாக அனைவரும் கூடிய நிலையில் அலுவல் முடிவில் மது விருந்து நடைபெற்றதாகவும் அதில் தான் கலந்து கொள்ள நேரிட்டதாகவும் தெரிவித்த ஜான்சன், இது தனக்கு தெரியாமல் தனது அலுவலக சகாக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறினார், அதற்காக தான் வருந்துவதாகவும் கூறினார்.

இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரும் எடின்பர்க் கோமகனுமான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி இறந்த போது அவரது உடல் ஏப்ரல் 17 ம் தேதி அடக்கம் செய்யும் வரை அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக இளவரசர் பிலிப் நல்லடக்கத்தின் போது தேவாலயத்தில் தனியாக அமர்ந்திருந்த ராணி எலிசபெத்

இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முந்தைய தினம் மாலை பிரதமர் இல்லத்தில் ஆரம்பித்த மது விருந்து விடியும் வரை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த மது விருந்தில் கலந்து கொண்டவர்கள் போரிஸ் ஜான்சனின் மகன் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஊஞ்சலை சேதப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்த மது விருந்து நடந்த சமயத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்கு இல்லை என்றும் அவர் தனது பண்ணை இல்லமான செக்கர்சில் தங்கி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இருந்தபோதும், இளவரசரின் மரணம் காரணமாக துக்கம் அனுசரிக்கப்பட்டபோது இதுபோன்ற கேளிக்கைகளில் ஈடுபட்ட விவகாரம் வெளியில் தெரிந்ததும் அதற்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் அனுப்பியிருக்கிறது பிரதமர் அலுவலகம்.

இந்த விவகாரம் அரண்மனையில் உள்ளவர்களை மட்டுமன்றி எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாடாளுமன்ற விசாரணைக்குப் பின் போரிஸ் ஜான்சன் பதவி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அந்நாட்டு கருவூலதலைவரும் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் அல்லது வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரின் பெயர் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.