சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக காகிதம் இல்லாத e-budget தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்காக கணினி பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக முந்தைய அதிமுக ஆட்சி கடந்த பிப்ரவரி மாதம்  இடைக்கால நிதிநிலை அறிக்கையை பிப்ரவரியில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், திமுக பதவி ஏற்றதும்,  தமிழக நிதி நிலவரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்; பொது பட்ஜெட் தனியாகவும் வேளாண்துறைக்கான பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் தமிழக பட்ஜெட் வரும் 13-ந் தேதியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 13-ந் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கப்பட உள்ளது. அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த முறை செலவினங்களை குறைக்கும் வகையில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை கடந்த மாதம் செய்தியளார்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் காரணமாக, சட்டமன்ற எம்எல்ஏக்கள் பட்ஜெட் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், அவர்களின் இருக்கையில் மடிக்கணினி பொருத்தும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதால், அங்குள்ள எம்எல்ஏக்களின் இருக்கையில் கணினிகிள் மற்றும் மடிக்கணினிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்முறையாக வரும் 13ந்தேதி காகிதம் இல்லாத e-budget தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.