சென்னை: தொழிற்பயிற்சி பயிலும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் அளிக்கப்படுவதாக  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இருந்தாலும், மாநில அரசு வழங்கிய  தளர்வுகளை தொடர்ந்து தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு முதுநிலை பயிற்சி மாணவர்கள், அவர்கள் பயிற்சி பெறும் தொழில்பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் இந்த கல்வியாண்டில் ஆகஸ்டு மாதம் வரை சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய இலவச பயண அட்டை அச்சிட்டு வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்டு மாதம் வரை மாணவர்களை அனுமதிக்குமாறு அனைத்து நடத்துனர்களுக்கும் போக்குவரத்துத்துறை சென்னை மண்டல துணை மேலாளர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.