டெல்லி: இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான கேல்ரத்னா, அர்ஜூனா ஆகிய விருதுகளுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயரை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய நாளை கடைசி நாளாகும்.

இந் நிலையில் இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஆக்கி சம்மேளனத்தால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

ராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிர் அணி, 2017ம் ஆண்டு ஆசியக் கோப்பைப் போட்டியை வென்றது. 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெறுவதற்கு ராணி ராம்பால் முக்கியப் பங்கு வகித்தார். 2016ல் அர்ஜூனா விருதும் 2020-ல் பத்ம ஸ்ரீ விருதும் வென்றுள்ள ராணி ராம்பால், தற்போது ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஆக்கி பயிற்சியாளர்கள் காரியப்பா, ரோமேஷ் பதானியா பெயர்கள் துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.