பிஎம் கேர்ஸ் நிதி கணக்கு விவரங்களை மும்பை நீதிமன்றத்தில் அளிக்க மோடி அரசு மறுப்பு

Must read

நாக்பூர்

பி எம் கேர்ஸ் நிதி குறித்த கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில்  அளிக்கப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா எதிர்ப்பு மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி வழங்கப் பிரதமர் மோடியால் பி எம் கேர்ஸ் என்னும் நிதி மார்ச் மாதம் 28 ஆம் தேதி அமைக்கப்பட்டது.   இந்த நிதியத்துக்குப் பிரதமர் மோடி தலைவராகவும் பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் அறங்காவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்   இந்த நிதியத்துக்கு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் நிதி ஏராளமான நிதி உதவி செய்துள்ளனர்.

இந்த நிதியத்தின் வரவு செலவு கணக்கு குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்விகள் கேட்டு வருகின்றன.  ஆனால் மத்திய அரசு அதற்குப் பதில் சொல்ல முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து வருகிறது.  மேலும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட வரவு செலவு கணக்கு குறித்த கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்த மத்திய அரசு இந்த நிதியம் தகவலுரிமை சட்டத்தின் கீழ் வராது என அறிவித்துள்ளது.

இதையொட்டி மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கறிஞர் அரவிந்த் வாக்மேர் என்பவர் வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.   அதில் பிஎம் கேர்ஸ்  நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளின் விவரங்களை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.   இந்த மனுவுக்கு மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் அனில சிங் பதில் அளித்துள்ளார்.

அவர் தனது பதிலில் இந்த மனுவுக்குப் பதில் அளிக்க மறுத்துள்ள மத்திய அரசு இந்த வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.  இதைப்போல் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதற்கு உயர்நீதிமன்ற அமர்வு அளித்த பதிலில் வழக்கு மனுவில் எந்தெந்த நிவாரணங்களுக்கு பி எம் கேர்ஸ் நிதியில் இருந்து எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என கேட்கப்பட்டுள்ளதால் இன்னும் இரு வாரங்களுக்குள் அதற்கான பதிலைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.   மேலும் மத்திய அரசு கணக்கு அளிக்க மறுப்பது குறித்து தெரிவிக்க விரும்புவதைப் பிரமாணப் பத்திரமாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது

More articles

Latest article