டில்லி

புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பொறுமை இல்லாததால் சொந்த ஊருக்கு நடந்து சென்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் இரண்டாவது கட்ட ஆட்சியின் முதல் ஆண்டு சமீபத்தில் நிறைவு பெற்றது.  இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.  பாஜக சார்பில் பல் கொண்டாட்டங்கள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது.  அவ்வகையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு செய்தி தொலைக்காட்சிக்குச் சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

அமித் ஷா அந்தப் பேட்டியில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.  அவர், “புலம்பெயர் தொழிலாளர்களை ஊரடங்குக்கு முன்னதாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தால், அது மாநில அரசுகளுக்கு பெரும் பிரச்சினைகளாக அமைந்திருக்கும். அப்போது மாநில அரசுகளிடம் போதிய சோதனை செய்யும் வசதிகளும், தனிமைப்படுத்தும் வசதிகளும் கிடையாது.

ஆகவே புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு முன்னதாக முதலில் மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். எனவே அதற்குப் பிறகு மோடி அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்காகப் பேருந்துகள் மற்றும் ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் 55 லட்சம் பேர் இதுவரை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில்வே அமைச்சகம் பெரிதும் உதவியுள்ளது. தற்போது புலம்பெயர் தொழிலாளர்களில்  பெரும்பான்மையானவர்கள் அவர்களது தனிமைப்படுத்தும் காலத்தை முடித்து அவர்களது குடும்பத்துடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர்.

கடந்த மே மாதம் 1 ஆம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதற்கு முன்னதாக ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்தே அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். 41 லட்சம் தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர். 4000 ரயில்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டுள்ளது.

ஆயினும் பொறுமையை இல்லாத சில புலம்பெயர் தொழிலாளர்கள் அரசு உதவிக்காக சிறிதும் காத்திருக்காமல்  அவர்களது மாநிலங்களுக்கு நடக்கத் தொடங்கினர்.  புலம்பெயர் தொழிலாளர்களின் பயணத்துக்கான எல்லா செலவுகளையும் இந்திய ரயில்வே ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவரை இரண்டு கோடி மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.