மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விக்கணைகள் தொடுக்கும் ப சிதம்பரம்

Must read

டில்லி

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு 12 கேள்விகள் கேட்டுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் அரசின் நிதி அமைச்சராக பதவி வகித்தவர் ப. சிதம்பரம்.  இவர் ஆளும் கட்சியின் போக்குக்கு பலமுறை தனது டிவிட்டர் பதிவுகள் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.    அவரது தற்போதைய டிவிட்டர் பதிவில் மத்திய பாஜக அரசிடம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்காதது, பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்டுள்ளார்.

அந்தக் கேள்விகளின் விவரம் இதோ :

1.       மத்திய அரசின் 2018-19 ஆம் வருட நிதி நிலை அறிக்கையில் சென்ற ஆண்டை விட பற்றாக்குறை அதிரித்துள்ளது.   அதாவது 3.2 சதவீதமாக இருந்தது 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.   உண்மையில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறித்த மத்திய பாஜக் அரசின் மதிப்பீடு என்ன?

2.       மத்திய அரசே ஒவ்வொரு நிதிப் பற்றாக்குறை இலக்கையும் முறியடிக்கிறது.  இவ்வாறு நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பது பணவீக்கத்தில் ஏதாவது தாக்கத்தை உண்டாக்குமா?  தற்போது மொத்தவிலையில் பண வீக்கமாக 3.6% மற்றும் சில்லரை பண வீக்கமாக 5.2% இருந்து வருகிறது.    அப்படியானால் 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டில் உங்கள் கணக்குப்படி சராசரி மொத்த மற்றும் சில்லறை விலை பணவீக்கம் எவ்வளவு?

3.       கடன் பத்திரங்களில் 10 ஆண்டுக்கான பத்திரங்களின் வட்டி 7.43% க்கு பதில் நேற்று 7.57 % ஆக உள்ளது.    இது அனைத்து கடன் பத்திரங்களின் வட்டி உபயோகத்துக்கான குறியீடா அல்லது பணவீக்கத்தால் அதிகரித்துள்ளதா?

4.       பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 70 லிருண்து 75 டாலராக உயர்ந்தால் உங்கள் பட்ஜெட் கணக்கை அது பாதிக்குமா?   பற்றாக்குறை இதனால் உயர்ந்தால் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவீர்களா அல்லது உற்பத்தி வரியை குறைப்பீர்களா?

5.       2017-18 ஆம் ஆண்டில் கூடுதலாக ரூ.48 ஆயிரம் கோடியை அரசு கடன் வாங்க உள்ளது. அரசின் சார்பில் ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.37 ஆயிரம் கோடி வாங்குகிறது. அப்படி என்றால், இந்த ரூ.85 ஆயிரம் கோடி எங்கு செல்லும்? 2017-18 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த செலவு ரூ.71 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. ஆனால், வருவாய் செலவீனம் என்பது ரூ.ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 371 கோடியாக இருக்கிறது. இது அரசின் ஒட்டுமொத்த நிதிக் கட்டுக்கோப்பின் விதிமுறைகளை உடைப்பதாகுமா?

6.       கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முதலீட்டு செலவு ரூ 3 லட்சத்து முதலீட்டு செலவு ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 801 கோடியாகும். திருத்தப்பட்ட மதிப்பீடாக ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடியாகும். ஆக ரூ.36 ஆயிரம் கோடி பற்றாக்குறை நிலவுகிறது. அப்படி என்றால் எந்தெந்த திட்டங்களையும், கட்டமைப்புகளையும் நிறுத்தப் போகிறீர்கள்?

7.       நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2018-19ல் 11.4% என சொல்லப்பட்டுள்ளது.  உண்மையான பொருளாதார வளர்ச்சி இதே வருடத்தில் எவ்வாறு இருக்கும்?

8.       இந்த அரசு பதவிக்கு வரும் போது ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் போவதாக கூறி இருந்தது.   சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிகக்கையின்படி, முறையான பாதுகாப்புகள் இருக்கும் வேலையே வேலைவாய்ப்பாக கருதமுடியும், அதுதான் பாதுகாப்பானது என்றது. அப்படி என்றால், பாஜக அதிகாரத்தில் வேலைவாய்ப்பு என்றால் என்ன? கடந்த 4 ஆண்டுகளில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியது போன்ற வேலைவாய்ப்புகளை எத்தனை கோடி உருவாக்கி இருக்கிறீர்கள்?

9.       கடந்த ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் சுங்க வரியாக கணக்கிடப்பட்ட ரூ. 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி அதற்குப்பின் திருத்தப்பட்ட அறிக்கையில் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 242 கோடியாக மாற்றப்பட்டது.  இது பற்றி நீங்கள் மக்களுக்கு அறிவித்துள்ளீர்களா?

10.   கடந்த ஆண்டு ஜூலை முதல் ஜி எஸ் டி அமுலாக்கப்பட்டது.  நீங்கள் ஜி எஸ் டி வசூலாக ரூ. 4 லட்சத்து 44 ஆயிரத்து 631 கோடி என அறிவித்துள்ளீர்கள்.    இந்த வரி வசூலானது 9 மாதங்களுக்கா அல்லது 11 மாதங்களுக்கா என ஏன் தெளிவு படுத்த வில்லை?

11.   இந்த ஆண்டின் மொத்த வரி வருவாய் 16.7 என மதிப்பிட்டுள்ளீர்கள்.  சராசரி பொருளாதார வளர்ச்சி 11.5% என்னும் போது வரி வருவாய் வளர்ச்சி 16.7% என்பது எவ்வாறு சாத்தியமாகும்?

12.   இந்த 2018-19 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் நிறுவன வரி 10.15% ஜி எஸ் டி 67.31% மற்றும் வருமான வரி 19.88% உயரும் என மதிப்பிட்டதை மக்களுக்கு பகிர்ந்துளீர்களா?

இவ்வாறு ப சிதம்பரம் மத்திய அரசுக்கு கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார்.

More articles

Latest article