மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

Must read

டில்லி,

ரேணுகா சவுத்ரி பற்றிய கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்ற மாநிலங்களவையில் நடை பெற்ற விவாதத்துக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் பதில் அளித்து பேசினார். அப்போது,  ஆதார் அட்டை கொண்டு வரும் யோசனையை 1998–ம் ஆண்டே பாரதீய ஜனதா அரசு முன்வைத்ததாக கூறினார்.  அப்போது காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார்.

இதனால் கோபமடைந்த மேல்–சபை தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மருத்துவரைப் போய் பாருங்கள்’’ என்று ரேணுகா சவுத்ரியை பார்த்து கூறினார்.

அவர் இவ்வாறு கூறியதை கேட்டு மோடி, ‘‘அவரை கட்டுப்படுத்தாதீர்கள். ராமாயண தொடரில் கேட்ட சிரிப்புக்கு பிறகு இப்போதுதான் அப்படி ஒரு சிரிப்பை கேட்க முடிந்தது’’ என்று புன்னகைத்தபடி கூறினார்.  (ராமாயணத்தில் சூர்ப்பனகையின் சிரிப்பை குறிப்பிடும் வகையில் அவர் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டதாக கருதப்படுகிறது)

பிறகு இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ, ரேணுகா சவுத்ரி கோப மூட்டும் வகையில் சிரித்த போதிலும் பிரதமர் கோபம் கொள்ளவில்லை என்று பதிவிட்டிருந்தார்.   அத்துடன் பிரதமர் பேச்சின் வீடியோ பதிவையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரேணுகா சவுத்ரி, மந்திரி கிரண் ரிஜிஜூ மீது சபையில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்போவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆட்சேபகரமான வகையில் பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா வலியுறுத்தி உள்ளார். மேலும்  அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவும் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article