சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக உள்ளார்.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவு குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் உரிய மருத்துவ குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த ஆணையத்தில் விசாரணைக்கு இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில் மீண்டும் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்தவகையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக உள்ளார். ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராவது இதுவே முதன்முறையாகும்.