டில்லி

நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் பொதுச் சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய பாஜக அரசு அனைத்து தரப்பினருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது.  இதற்காக 22-வது மத்திய சட்டக்கமிஷன், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத அமைப்புகளின் கருத்துகளைக் கேட்க உள்ளது.

பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்னர், மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசியபோது, “2 வகையான சட்டங்களால் நாட்டை வழிநடத்த முடியாது எனவும் பொது சிவில் சட்டம் அவசியம் எனவும் திட்டவட்டமாக கூறியது, பேசுபொருளாக மாறி  உள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

கபில் சிபல் எம்.பி. (தலைவர், ‘இன்சாப்’):-

பிரதமர் பொது சிவில் சட்டம் வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். முஸ்லிம்களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றன எனவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதையொட்டி சில கேள்விகள் எழுகின்றன. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இது ஏன்? 2024 (தேர்தலுக்காகவா?). உங்கள் திட்டம் இந்துக்கள், பழங்குடியினர், வடகிழக்கு மாநிலத்தவர் என அனைவருக்கும் சீராக இருக்குமா? ஒவ்வொரு நாளும் உங்கள் கட்சி முஸ்லிம்களைக் குறி வைத்தது. இப்போது ஏன் கவலை?

பரூக் அப்துல்லா (தலைவர், தேசிய மாநாடு கட்சி):-

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு மறுசிந்தனை செய்ய வேண்டும். இது பன்முகத்தன்மை கொண்ட நாடு ஆகும். இங்கே பல்வேறு இனங்கள், மதங்களைப் பின்பற்றுகிற மக்கள் வாழ்கிறார்கள். முஸ்லிம்களுக்குத் தனியாக ஷரியத் சட்டம் உள்ளது. எனவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை சிந்திக்க வேண்டும்.

ஹர்ஜிந்தர் சிங் தாமி (தலைவர், சிரோமணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி):-

பொது சிவில் சட்டத்தையும், அதை அமல்படுத்துவதையும் சிரோமணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி கடுமையாக எதிர்க்கிறது. பொது சிவில் சட்டத்தால் பாரம்பரியங்கள், கலாச்சாரங்கள். சிறுபான்மையினரின் தனித்துவ அடையாளம் சிதைந்து போக வாய்ப்பு உள்ளது 

எனத் தெரிவித்துள்ளனர்