சிறார்களுக்கு கோவாக்சின் மட்டுமே போடப்படும் :  மத்திய அரசு அறிவிப்பு

Must read

டில்லி

த்திய அரசு சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்படலாம் என அச்சை எழுந்துள்ளது.  இதையொட்டி கடந்த 25 ஆம் தேதி பிரதமர் மோடி வரும் ஜனவரி 3 முதல் 15-18 வயது சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்படும் எனவும் ஜனவரி 10 முதல் சுகாதார முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதைத் தாண்டியோர், இணை நோய் உள்ளோருக்கு பூஸ்டர் டோஸ் போடப்படும் எனவும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பையொட்டி மத்திய அரசு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது.

அதில்,

“15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்கள், தடுப்பூசி செலுத்தத் தகுதி உடையவர்கள். அதாவது, 2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இந்த வயது சிறுவர்களுக்கு அவசர பயன்பாட்டுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு மட்டுமே ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு கோவேக்சின் மட்டுமே செலுத்தப்படும். அவர்கள் ‘கோவின்’ இணையதளத்தில் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதுபோல், சுகாதார, முன்கள பணியாளர்கள், 60 வயதைக் கடந்தவர்கள், இணை நோய் கொண்டவர்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர்) தடுப்பூசி போடுவதற்கான தகுதி, அவர்கள் 2-வது டோஸ் போட்டுக்கொண்ட தேதி அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். அந்த தேதியில் இருந்து 9 மாதங்கள் முடிந்த பிறகு, அதாவது 39 வாரங்கள் கழித்து, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

‘கோவின்’ இணையதளத்தில் உள்ள தேதிப்படி, 9 மாதங்கள் ஆனவுடன் அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட தகவல், தடுப்பூசி சான்றிதழில் இடம்பெறும். 60 வயதைத் தாண்டியவர்கள், இணை நோய் கொண்டவர்கள் ஆகியோர் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றுப் போட்டுக்கொள்ளலாம்.

‘கோவின்’ இணையதளத்தில் ஏற்கனவே உள்ள கணக்கைப் பயன்படுத்தியோ, அல்லது செல்போன் மூலம் புதிய கணக்கு உருவாக்கியோ பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். தடுப்பூசி மையங்களில் நேரில் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம்.

வருமானத்தைப் பொருட்படுத்தாமல், தகுதியுள்ள அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்படும். பணம் செலுத்த முடிந்தவர்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்” 

என்று  கூறப்பட்டுள்ளன.

 

More articles

Latest article