திருவனந்தபுரம்

ந்த வருட மண்டலம் மற்றும் மக்ரபூஜை கால சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு நிறைவு அடைந்துள்ளது..

வரும் 15 ஆம் தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த வருடத்துக்கான மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காகத் திறக்கப்படுகிறது.  16 ஆம் தேதி முதல் பூஜைகள் தொடங்குகின்றன.  கொரோனா பரவலை முன்னிட்டு தினசரி இணையம் மூலம் முன்பதிவு செய்யும் 25000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது..

இவ்வாறு முன்பதிவு செய்யும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்துக்குள் சோதிக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.   கடந்த மாதம் முன்பதிவு தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது.  இதுவரை சுமார் 12 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதில் புத்தாண்டு மற்றும் மகரவிளக்கு அன்றைய தரிசனத்துக்கான முன்பதிவு உடனடியாக முடிவு அடைந்துள்ளது.    தினசரி 25000 பேருக்கு அனுமதி அளிக்கும் நிலையில் மகரவிளக்கு அன்று மட்டும் 30000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   தற்போது உடனடி முன்பதிவு வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் வராமல் இருக்கும் நாட்களில் உடனடியாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.   இந்த முன்பதிவுக்காக நிலக்கல், எருமேலி, குமுளி ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.  இதில் வரும் 15 ஆம் தேதி முதல் நிலக்கல்லில் இந்த வசதி தொடங்குகிறது.    

இதற்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு பாஸ்போர்ட் நகல் அவசியமாகும்.