புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் காளை முட்டி ஒருவர் பலியானார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளா போட்டி மற்றும் சேவல் சண்டை என பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரு நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன.  இதனை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதற்கிடையே காளையை அடக்க முயன்றபோது புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பரை சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கியது. இதில் அவர் குடல் சரிந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும்  வழியிலேயே  அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல குமரி மாவட்டம் குழித்தலை அருகே ஆர்.டி. மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் சிவகுமாரின் பார்வை பறிபோனது. காளை முட்டியதில் பள்ளபட்டியை சேர்ந்த இளைஞர் சிவகுமாரின் வலது கண் வெளியே வந்து பார்வை பறிபோனது. இளைஞர் சிவகுமார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாடுபிடி வீரர் சிவகுமார் சோர்வடைந்து தடுப்பு கம்பி வேலி ஓரமாக அமர்ந்து இருந்த போது காளை குத்தியது.

மஞ்சு விரட்டு

மஞ்சு விரட்டு என்பது, “மஞ்சி கயிற்றால்” மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் தங்க நாணயங்கள், பணமுடிப்பபு, புத்தாடைகள், சலங்கை மணிகள் ஆகிய வற்றை எடுப்பதற்காக வீரர்கள் மாடுகளை விரட்டி சென்று பிடிக்கும் விளையாட்டு மஞ்சி விரட்டு விளையாட்டு ஆகும். பிற்காலத்தில் “மஞ்சி” என்ற சொல் மருவி “மஞ்சு விரட்டு” ஆனது.