டில்லி:

கோராக்பூர் மருத்துவமனையில் 64 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.

உ.பி. மாநிலம் கோராக்பூர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக 64 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி டீன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யாநாத், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜேபி நாடா ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், நீதிபதி சந்திரசுத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில்,‘‘இந்த விவகாரத்தை உ.பி. அரசு நேரிடையாக கையாளுகிறது. இது தொடர்பான எந்த குறைகளானாலும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும். உ ச்சநீதிமன்றம் நேரடியாக தலையிடாது’’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.