டில்லி:

ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 21 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜ்யசபா தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவ் கடந்த வாரம் நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராஜ்யசபா உறுப்பினரான அலி அன்வரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது அவசியமான நடவடிக்கை என்று அக்கட்சியின் மாநில தலைவர் விஷிஸ்டநாராயண் தெரிவித்தார்.

லாலு, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக் கொண்டதை தொடர்ந்து சரத்யாதவ், அலி அன்வர் ஆகியோர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நிதிஷ்குமாருக்கு எதிராக சரத்யாதவ் மாநிலத்தில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசினார்.

சரத்யாதவுக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சியினர் 21 பேரை சஸ்பெண்ட் செய்து நிதிஷ்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.