சென்னை:
நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை (23-1-2022) அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத் தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்ட நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை பகல், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.