சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக சிறைத்துறை வரலாற்றில் 200 நாட்களை தாண்டி ஒருவருக்கு பரோலில் கொடுக்கப்பட்டு இருப்பதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை  ஆயுள் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்பட 7 கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரை ஆளுநரிடம் கிடப்பில் உள்ளது. நாட்டின் தேசிய தலைவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று மத்தியஅரசு கூறி வருகிறது.

இந்தநிலையில், உடல்நிலையை காரணம் காட்டி, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது.

முதன்முதலாக  தமிழக அரசு மே 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இந்த பரோலானது, தற்போது 8வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 7 முறை நீட்டிக்கப்பட்டுள்ள பரோல் காலம் ஜனவரி 24ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரது உடல்நிலையை காரணம் காட்டி மேலும் ஒருமாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதன் காரணமாக, சுமார் 200 நாட்களை தாண்டி பேரறிவாளன் பரோலில் வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவரது பாதுகாப்புக்காக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் அவரது ஊரில் இருந்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, பேரறிவாளன் பரோலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சி, தற்போது மவுனம் சாதித்து வருகிறது. இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.