புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதல்வராக நாளை (7ந்தேதி) என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்க இருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை பதவி ஏற்பு விழா நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் நாளை மாநில முதல்வராக என்.ஆர்ல.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பதவி ஏற்பு விழாவுக்கான அழைப்பிதழும் அனுப்பப்பட்டது.

அதில், நாளை மதியம் 1.20 மணிக்கு முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்பார் என்றும், கவர்னர் மாளிகையில் கொரோனா நெறிமுறைகளுடன் எளிய முறையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும்,அழைப்பிதழ் உள்ளவர்கள் ஒருவர் மட்டுமே விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  ரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாளை பதவி ஏற்பு விழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ரங்கசாமி நேற்று  சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி சித்தர் ஆலயத்துக்கு வந்து வழிபட்டுவிட்டு புதுச்சேரி திரும்பியது குறிப்பிடத்தக்கது.