சென்னை: இருசக்கர வாகனங்களின் பின்இருக்கையில் பயணம் செய்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து தலா ரூ.100 அபராதம் வசூல் செய்தனர்.

இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்ப வர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

அதன்படி,சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் சென்ற 367 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக இன்று மட்டும் 1278 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளதாகவும் சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் போக்குவரத்து போலீசார் ரூ.100 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை முதல் இதுவரை ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பின் இருக்கைப் பயணிகள் மீது 367 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் வருவோரிடம் அபராதம்பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அபராதத்தொகை வசூல் செய்து வருவதால் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை அடுத்த மூன்று நாட்கள் நடைபெறும் எனவும்; தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கோயில், மளிகைக்கடை, அவசர தேவைகளுக்காக அருகே உள்ள பகுதிகளுக்கு செல்லும்போது, ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுவது சிரமத்தை ஏற்படுத்துகிறது  வாகன ஓட்டிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.