சென்னை: இளையராஜாவை  காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகத்தில், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை வழங்கியது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் சமூக வலைதளங்களில் கடுமையான வார்ததைகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இளைய ராஜா தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர் தனது கருத்தை வாபஸ் பெற முடியாது என உறுதியாக தெரிவித்து உள்ளார்.

இந்தநிலையில், தேமுதிக தலைவரும் நடிகருமான  விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இளையராஜாவை  காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என கூறியுள்ளார்.

அவரது டிவிட்டில்,  “அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்றைக்கும் அவரவர்கள் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.  ஒரு சூரியன்,  ஒரு சந்திரன்.  அதே போல தான் இங்கு யாரையும் யாருடன் ஒப்பிட்டு பேச முடியாது . அவரவர்களுக்கு நிகர் அவர்கள்தான். இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார். இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்த .  கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு, மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.