சென்னை: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் இடம் பெறும் கட்டுரைக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ம் தேதி விடுதலை அடைந்த நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாளை டிஸ்சார்ஜ் ஆகும் அவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் இணைக்க நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்தார். அதேபோல், சசிகலாவை வரவேற்று பேனர், போஸ்டர்கள் வைத்த 2 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

இந் நிலையில், சசிகலா தலைமையில் அதிமுக மீட்கப்படுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என அமமுகவின் நாளேடான ‘நமது எம்ஜிஆர்’ கருத்துத் தெரிவித்துள்ளது. அதில், எத்தனை தீய சக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் நடத்தினாலும், அவை அனைத்தும் புஸ்வாணமாகிவிடும். சிம்மாசனத்தில் அமரவைத்தவருக்கு காட்டும் விசுவாசம் இதுதானா, பதவி கிடைத்ததும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவோருக்கு நாவடக்கம் வேண்டும் என்று அந்த நாளேடு கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது, எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது. அதிமுக ஒரு மாபெரும் எஃகு கோட்டை. சசிகலாவும் அவரை சார்ந்தவர்களும் அதிமுகவில் இல்லை. அவர்கள் இல்லாமலேயே ஆட்சியும் கட்சியும் சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. முதல்வரும் டெல்லியில் தெளிவாக, அதிமுகவில் சசிகலா சேர நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்கள், அமமுகவின் கட்சி நாளிதழில் கட்டுரை எழுதி அதிமுக – அமமுகவை இணைக்க மறைமுக அழைப்பு விடுக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், அவர்கள் நாளிதழில் ஆயிரம் எழுதவர். அதற்குப் பதில் சொல்ல முடியாது. அதற்கு அவசியமும் எங்களுக்கு இல்லை என்று கூறினார்.