ஸ்ரீவில்லிபுத்தூர்:  கல்லூரி மாணவிகளை தவறான வழிநடத்திய புரபஸர் நிர்மலா தேவி மீதா வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், விசாரணைக்கு நிர்மலாதேவி ஆஜராகாததால், வழக்கின் தீர்ப்பு 29ந்தேதி வழங்கப்படும் என   ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும்  தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018-ம் ஆண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் மாணவிகள் ரகசிய வாக்குமூலங்கள் அளித்தனர். இந்த வழக்கின்   இருதரப்பு வாதங்கள், விசாரணை நிறைவுபெற்ற நிலையில், இன்று (ஏப்.26) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.  விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவி ஆஜராகவில்லை. முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு வரும் 29ந்தேதி வழங்கப்படும் என நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

நிர்மலாதேவி நேற்று மாலை முதல் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

330 நாட்களுக்கு பிறகு வெளியே வருகிறார் நிர்மலா தேவி: ஜாமீன் வழங்கியது உயர்நீதி மன்றம்