சென்னை

முன்னாள் அதிமுக பத்திரிகையான நமது எம் ஜி ஆர் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்

மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுக் கடந்த 27ஆம் தேதி விடுதலை அடைந்தார்.  அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சசிகலாவை அதிமுகவில் இணைக்க நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை”எனத் தெரிவித்தார். அத்துடன், சசிகலாவை வரவேற்று பேனர், சுவரொட்டிகள் வைத்த 2 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அதிமுக நாளேடும் தற்போது அமமுக நாளேடுமான நமது எம் ஜி ஆர்,. ”சசிகலா தலைமையில் அதிமுக மீட்கப்படுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’ எனச் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், “எத்தனை தீய சக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் நடத்தினாலும், அவை அனைத்தும் புஸ்வாணமாகிவிடும்.

சிம்மாசனத்தில் அமர வைத்தவருக்குக் காட்டும் விசுவாசம் இதுதானா? பதவி கிடைத்ததும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவோருக்கு நாவடக்கம் வேண்டும்” என அந்த நாளேடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

இந்த செய்தி குறித்து அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம், ” அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஏனெனில் அதிமுக ஒரு மாபெரும் எஃகு கோட்டை. அதிமுகவில் சசிகலாவும் அவரை சார்ந்தவர்களும் இல்லை. ஆட்சியும் கட்சியும் அவர்கள் இல்லாமலேயே சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.. நமது முதல்வரும் டெல்லியில் தெளிவாக, ‘அதிமுகவில் சசிகலா சேர நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை’ எனக் கூறியுள்ளார்.” என தெரிவித்துள்ளார்

செய்தியாளர்கள், “அமமுக thanathu கட்சி நாளிதழில் கட்டுரை எழுதி அதிமுக – அமமுகவை இணைக்க மறைமுக அழைப்பு விடுக்கிறதா எனக் கேள்விகள்  எழுப்பி உள்ளனர், அதற்குப் பதில் அளித்த ஜெயக்குமார், “அவர்கள் நாளிதழில் ஆயிரம் எழுதவர். அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை எனக் கூறி உள்ளார்.