தஞ்சை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்னும் கால அவகாசம் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மற்றும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை செய்துவரும் நிலையில், தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முன்னதாக, அதிமுக – பாஜக கூட்டணி இடையே, முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் நிறுத்துவோம் என்று இருவரும் கூறி வந்த நிலையில், ஒருவழியாக எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என முடிவுக்கு வந்தனர்.

இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்னும் கால அவகாசம் உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது. சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம். தொடர்ந்து கூட்டணி இருப்பதாக முதல்வரும், துணை முதல்வரும் கூறிவிட்டனர்.

அதன்பிறகு பாஜகவில் கலந்துபேசி முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் எனத் தெளிவாகக் கூறியுள்ளோம். நாங்கள் கல்யாணம் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறோம். நகை எவ்வளவு எனப் பேசி முடிவு செய்வோம். இதனால், கல்யாணம் நிற்காது. எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று கூறினார்.