புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சையில் பெரிய கவனம் செலுத்திவரும் நிலையில், கர்ப்பிணிகளுக்குத் தேவையான முறையான சிகிச்சைகள் மறுக்கப்படுவதாக, தேசிய பெண்கள் ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் மறுப்பதால், பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார் தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மா.

அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது, “பிரசவத்திற்காக, மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காத சூழல் தற்போது பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு அனுமதி மறுக்கின்றனர். இதனால், தாயும் சேயும் இறந்த சம்பவங்கள்கூட நடந்துள்ளன. இது மிகவும் கவலை அளிக்கிறது.

எனவே, பிரசவத்திற்கு தனி ஆம்புலன்ஸ் சேவை வழங்கவும், மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஏற்படுத்தித் தரவும், தனி அவசர உதவி எண்களை அறிவிக்கவும், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.