பிறந்தநாளில் மறைந்த ஜெ. அன்பழகன்… மருத்துவமனையில் ஸ்டாலின் அஞ்சலி…

Must read

சென்னை:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தனது பிறந்தநாளிலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு மருத்துவமனையிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.  இன்று தி.நகரில் உள்ள  கன்னம்மாபேட்டை சுடுகாட்டில்  அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது

திமுக மாவட்டச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்கு காலத்தில், ஏராளமான பொதுமக்களுக்கு பம்பரமாக சுழன்று நிவாரண உதவிகள் வழங்கி வந்தார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த (ஜூன்)  2 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான  ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அங்கு அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை 8.05 ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இன்று ஜெ.அன்பழகனின் பிறந்த நாள், அதே நாளில் அவரது மரணம் நிகழ்ந்திருப்பது திமுகவினரிடையே சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.

அன்பழகன் மறைந்த செய்தி கிடைத்தவுடன்  திமுக தலைவர் ஸ்டாலின் ரேலா மருத்துவ மனைக்குச் சென்றார். அவருடன் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முன்னணிப் பிரமுகர்களும் சென்றனர்.  அங்கு ஜெ. அன்பழகனுக்கு மருத்துவமனையிலேயே அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டனர்.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததால், அஞ்சலி நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காமல் நேரடியாக அவரது உடல் சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் கண்ணம்மாப்பேட்டை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.  அங்கு மருத்துவ முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

More articles

Latest article