சென்னை: வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைம தேர்தல் அதிகாரிக்கு, தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்வோருக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை அரசு செய்து தராததால், வாக்காளர்கள் வாக்களிக்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இன்றும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் உள்பட அரசியல் கட்சியினர், திரையுலகினர் என பலரும் தங்களது வாக்கினை காலையிலேயே செலுத்தினர். மேலும் பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது, தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான நேரத்தை மேலும் 2மணி நேரம் அதிகரிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். தற்போது வாக்குப்பதிவு காலை 7மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதலாக 2மணி நேரம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான உரிய பேருந்து அல்லது பொது போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் எல்லோரும் தங்களது வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான உரிய போக்குவரத்து ஏற்பாட்டை செய்யும் வகையில் மாநில போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.
வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த வாக்குச்சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் வாக்குப்பதிவு செயல்முறை மிகவும் தாமதமாக இருப்பதாக தகவல். அதை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளின் தேர்தல் மேற்பார்வை அதிகாரி பார்வையிட்டு, விரைவு படுத்த வேண்டும்.
மேலும், வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும். இது போக்குவரத்து பிரச்சினையில் சிக்கிய வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கும். அந்த வகையில் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். அந்த திருத்தப்பட்ட நேரத்துக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளரும் வாக்கினை செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]இன்று வாக்குப்பதிவு: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள்…