டில்லி: கொரோனா காலத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் நவம்பர் 30ந்தேதியுடன் நிறைவுபெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

உலக பொருளாதாரத்தை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று பரவி 2 ஆண்டுகளை நெருங்கி உள்ளது. இருந்தாலும் முழுமையாக கட்டுப்படுத்த நிலை நீடித்து வருகிறது. அதேவேளையில் தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல், மத்திய அரசு, ‘பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள  80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், வரும் 30ந்தேதியுடன் நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய உணவுப் பொருட்கள் துறை செயலர் சுதான்ஷு பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது. நாடு முழுதும் பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ்  80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுடன், கூடுதலாக இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. இந்த இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதை, நவ., 30க்குப் பின் நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும்,  இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாலும், வெளிச் சந்தையில் உணவு தானியங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாலும், இலவச  அரிசி அல்லது கோதுமை திட்டம் இந்த மாதத்துடன் நிறைவுபெறுகிறது என தெரிவித்தார்.