சென்னை: நாடு முழுவதும் நவம்பர் 8 ம் தேதி முதல் மத்தியஅரசு அலுவலகங்களில்  அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ்  முறையை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்களின் பணிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில், பயோமெட்ரிக் முறையை மத்தியஅரசு, நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பொருத்தி நடவடிக்கை எடுத்தது. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் போன்ற காரணங்களால், பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ‘பயோமெட்ரிக்’ அட்டெண்டன்ஸ் திட்டம் 8ஆம் தேதி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.,

இது தொடர்பாக இந்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 8ந்தேதி முதல் அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

பயோமெட்ரிக் பதிவு செய்யும் முன் அனைத்து ஊழியர்களும் கையை சானிடைசர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

இதற்காக பயோமெட்ரிக் கருவிக்கு அருகே சானிடைசர் பாட்டில்கள் இருக்க வேண்டும்.

வருகை பதிவு செய்யும் ஊழியர்கள் ஆறு அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.

வருகை பதிவு செய்யும் நேரம் உட்பட அலுவலகத்தில் எந்நேரமும் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

கூட்டத்தை தவிர்க்க தேவைப்பட்டால் கூடுதல் கருவிகளையும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அறிவித்து உள்ளது.