சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நவஜோத் சிங் சித்து கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியிருந்த விவகாரம் பெரும பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், தற்போது அதனை  திரும்ப பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் 2022ம் ஆண்டு மார்ச் ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சியை வலுப்படுத்துவதாக காங்கிரஸ் தலைமை எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் அங்கு கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் வகையிலேயே உள்ளது. முதல்வராக இருந்து வந்த கேப்டன் அம்ரீந்தர் சிங் பதவி விலகல், புதிய முதல்வர் தேர்வு மற்றும், மாநில காங்கிரஸ் தலைவராக கிரிக்கெட் பிளேயர் சித்து நியமனம் என பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.

ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் கட்சியை பலப்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே தொடர்ந்து வருகிறது. ஏனென்றால், சித்து எந்தவொரு இடத்திலும் நிலையாக இருந்து பணியாற்றியதில்லை. முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்குடன் மோதல், பின்னர் தற்போதைய புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியுடன் கருத்து வேறுபாடு, இவைகள் சரிசெய்யப்பட்ட நிலையில், மாநில தலைவர் பதவி ராஜினாமா என அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, கட்சி பலப்படுத்துவதற்கு பதிலாக கட்சியை பலவீனப்படுத்துவதாகவே அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சித்துவின் ஆதரவாளராக அறியப்படும் சரண்ஜித் சிங் சன்னி  தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது.  இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி திடீரென யாரும் எதிர்பாரா விதமாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்து காங்கிரசில் சேவையாற்றப் போவதாகவும் சித்து திடீரென அறிவித்தார். இதுக்குறித்த தனது ராஜினாமா கடிதத்தில், பஞ்சாப் மாநில நலனில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது. என்றும் தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும், தொண்டராக கட்சியில் தொடர்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து மேலும் சிலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

ஆனால் காங்கிரஸ் தலைமை சித்துவின் ராஜினாமாவை ஏற்க மறுத்து அவருடன் காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்னும் புதிய கட்சியை துவங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் தலைமைக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்ரீந்தர் சிங் தலைமையில், அவரது ஆதரவாளரகள் தனியாக சென்றால், காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் வாக்கு வங்கியும் பிரிய வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், தற்போது சித்து,  மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தொடர உள்ளதாக  கூறியதுடன், மாநிலத்துக்கு  புதிய அட்வகேட் ஜெனரல் நியமிக்கப்படும் நாளில் தான் பதவி ஏற்றுக்கொள்ளதாக கூறியுள்ளார். மேலும, மேலும் தான் ராஜினாமா செய்ததுக்கு ஈகோ காரணம் அல்ல என்று கூறினாலும், அவரது செயல்கள்,  பஞ்சாப் அரசியலில் பரபரப்பையே ஏற்படுத்தி உள்ளது.

தன்னம்பிக்கை அற்றவரும், யாரையும் அனுசரித்து செல்ல மறுப்பவரும், அரசியலையும் கிரிக்கெட் விளையாட்டு போல எண்ணி நடந்துகொள்ளும் மாநில தலைவரான சித்துவால், அங்கு காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்ட முடியுமா?