அதானி நிறுவனம் குறித்து விசாரணை நடைபெறுவதாக நிதித் துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய நிலையில் அப்படி ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் SEBI தெரிவித்துள்ளது.

பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்து இந்திய வங்கிகளில் கடன் வாங்குவதாகவும் இதன் மூலம் தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதாகவும் அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது.

இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய பங்கு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI – செபி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து SEBI விசாரணை நடத்தி வருவதாக கடந்த 2021 ம் ஆண்டு ஜூலை மாதம் 19 ம் தேதி நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்திருந்தார்.

அதேவேளையில், அதானி குழுமத்துக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் எதையும் தாங்கள் விசாரிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் செபி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ், “வெளிநாட்டு ஷெல் நிறுவனங்களைப் பயன்படுத்தி பணமோசடி மற்றும் ரவுண்ட் ட்ரிப்பிங் மூலம் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

அதற்காக பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது, தவிர இந்த விசாரணைக்கு எதிராகவும் அதானிக்கு ஆதரவாகவும் மேலிருந்து இடையூறு செய்கின்றனர். இவை அனைத்தும் ஒன்றைவிட ஒன்று மோசமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதானி நிறுவன மோசடி விரிவான விசாரணைக்கு 6 மாத அவகாசம் தேவை… முதல்கட்ட விசாரணையில் மோசடியை உறுதிசெய்தது செபி