பனாஜி: கோவாவில் கொரோனா குறித்து இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், ஒவ்வொருவரும் தங்களை சோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், கரோனா பரவுவதை தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

கோவாவில் நாளொன்றுக்கு 250க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் பதிவாகி வருகின்றன. தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கட்டுப்பாடுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.