சென்னை: இலங்கை குண்டு வெடிப்பிற்கும், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கும் எந்த தொடர்புமில்லை என மறுத்துள்ளார் அந்த அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்டதாய் குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்பு தேசிய தெளஹீத் ஜமாத். இந்த அமைப்பு, கடந்த 2014ம் ஆண்டு, ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாத் என்ற இயக்கத்திலிருந்து பிரிந்த அமைப்பு என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பை அடுத்து, தமிழ்நாட்டில் இயங்கும் தெளஹீத் ஜமாத் அமைப்பின் மீது பலரின் பார்வையும் சென்றது. இதனையடுத்து, விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது அந்த அமைப்பு.

அந்த அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் கூறியதாவது, “அந்த அமைப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எப்படி, திமுக மற்றும் அதிமுக என்பதில் எப்படி, திராவிட முன்னேற்ற கழகம் என்ற வார்த்தைகள் பொதுவாக வருகிறதோ, அதுபோலத்தான் தெளஹீத் என்ற வார்த்தையும்.

தெளஹீத் என்பது ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தும் அரபு மொழி வார்த்தை. இந்த வார்த்தையை எத்தனையோ இஸ்லாமிய இயக்கங்கள் பயன்படுத்துகின்றனர். எங்களுக்கு வன்முறையில் எந்த நம்பிக்கையும் கிடையாது. உண்மையான முஸ்லீம்கள் யாரும் இத்தகைய வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்.

சில மீடியாக்கள் எங்களை குறிவைத்து இலங்கை அமைப்புடன் சேர்த்து செய்தி வெளியிடுகின்றன. இலங்கை அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாத் அமைப்புடன் மட்டுமே எங்களுக்கு தொடர்புண்டு” என்றார்.