சென்னை: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நள்ளிரவு 3மணி நேரம் மட்டும் மதுபானம் விற்பனைக்கு மட்டும் தடை போட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் பிரபல பொது இடங்களில் பங்கேற்க கூடாது, தனி இடங்களில் பங்கேற்று கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், புதுச்சேரியில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொண்டாட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் உள்ள விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண் டிருக்க வேண்டும். மேலும், நட்சத்திர விடுதிகள், தனி நிகழ்ச்சிகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி கரிகாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,  கொரோனா ஊரடங்கு தாக்கத்தில் இருந்து மீண்டுவரும் நிலையில், அடிப்படை கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலங்களில் இருந்து  லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் வைத்தியநாதன்,  பரத சக்கரவர்த்தி  அமர்வில் விசாரிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,   புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என  தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்கும் விடுதிகளில் ஏற்கனவே தங்க முன்பதிவு செய்தவர்கள் தங்கிக்கொள்ள அனுமதி வழங்குவதாகவும், மதுபான கடைகள், பார்கள், விடுதிகள் எந்த இடத்திலும் மதுபான விற்பனை கூடாது, பொதுமக்கள் பொது இடங்களிலும் மது அருந்தக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்ததுடன்,  டிசம்பர் 31ந்தேதி  இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை மதுபான விற்பனைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.