புதுடெல்லி:
ருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என தேசிய மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘ நெக்ஸ்ட்’ (National Exit Test- NExT) தேர்வு நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டிருந்தது. எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வு இந்தக் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் கூறியிருந்தது. எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள், ‘நெக்ஸ்ட் 1′ தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே, பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற முடியும். ‘நெக்ஸ்ட் 2′ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கும், இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவப் படிப்புகளுக்கான நெக்ஸ்ட் தேர்வு மாநில உரிமையை பறிப்பதாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேதி குறிப்பிடாமல் நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.