திருநெல்வேலி:
நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது, கரியமாணிக்க பெருமாள் கோவில். இக்கோவிலில் நின்ற, அமர்ந்த, கிடந்த ஆகிய மூன்று விதமான தோற்றங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார். பங்குனி மற்றும் தை மாத திருவோண திருநாளில், 4 ரத வீதிகளில் கருட வாகனத்தில் அமர்ந்து பெருமாள் வீதி உலா வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தென்திருப்பதி வெங்கிட நாத பெருமாள், மகிழ் வண்ணநாதர், லட்சுமி நரசிங்க பெருமாள், சங்காணி வரதராஜப் பெருமாள், கரிய மாணிக்க பெருமாள் ஆகியோர் கருட வாகனத்தில் இந்த கோவில் முன்பு சேவை சாதிப்பார்கள்.

இந்த திருத்தலம் ‘நீலரத்ன சேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் வேணு வனம் என்றும் சொல்வார்கள். இந்த ஆலயத்தின் தீர்த்தமாக, ‘பத்பநாப தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம்’ ஆகியவை உள்ளன. ஆலய விமானம் ‘ஆனந்த விமானம்’ ஆகும். இந்த ஆலயம் சூரியன், சனி, ராகு, கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் வைகானச ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயத்தின் தல விருட்சம் மூங்கில் ஆகும்.

நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்நிலையில், இன்று பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.