டில்லி

ணிப்பூர் மாநிலத்தில் நாளை நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இரு இனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடும் வன்முறையாக வெடித்துள்ளது.   மாநிலத்தில் கடும் கலவரம் மற்றும் கடும் பீதி நிலவி வருகிறது.   மாநிலம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.  இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாளை மே 7ஆம் தேதி அன்று நாடெங்கும் மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது.  மணிப்பூர் மாநில அரசு அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக நீட் தேர்வை ஒத்தி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.  இந்த வேண்டுகோளை மத்திய அரசின் சுகாதாரத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது.

அதன்படி மத்திய அரசு சுகாதாரத்துறை நாளை நடைபெற இருந்த நீட் தேர்வை மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.  மேலும் இந்த தேர்வு வேறு தேதியில் நடைபெறும் எனவும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மற்ற மாநிலங்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது.