டில்லி

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மனுவை அளிக்க வந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அமித்ஷா மறுத்துள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  இது குறித்து சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் பரிசீலனையில் மாதக்கணக்கில் உள்ளது.  இது குறித்து தமிழக முதல்வர் ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

நாடாளுமன்ற குளிர்காலத் தொடரில் இந்த கோரிக்கை குறித்து அனைத்துக் கட்சிகளும் கூட்டாக வலியுறுத்தின.   இது குறித்த மனுவைவை கடந்த மாதம் 28 ஆம் தேதி குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் தமிழக உறுப்பினர்கள் வழங்கினர்.  அது உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.   இதற்கான நினைவூட்டலை நேரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளிக்க டி ஆர் பாலு தலைமையில் அனைத்துக் கட்சி குழு முயன்றது.

ஆனால் அவர்களைச் சந்திக்க அமித்ஷா மறுத்துள்ளார்  இது குறித்து டி ஆர் பாலு, “தமிழக சட்டப்பேரவையில் நீட் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் அவரது இல்லத்தில் வைத்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்,   மேலும் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். இது குறித்து நேரில் விளக்கமளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் 10 நாட்களாக நேரம் கேட்டு வந்தோம்.

அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் கோரிக்கையை 3ஆம் முறையாக நிராகரித்துள்ளார்.  ஆளுநர் இந்த மசோதாவை இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.  இதற்கு முழுப்பொறுப்பும் ஆளுநரை சேரும்.  இதுவரை நீட் தேர்வு அச்சத்தில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.